திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.99 பாவநாசம் - திருக்குறுந்தொகை
பாவ மும்பழி பற்ற வேண்டுவீர்
ஆவில் அஞ்சுகந் தாடு மவன்கழல்
மேவ ராய்மிக வும்மகிழ்ந் துள்குமின்
காவ லாளன் கலந்தருள் செய்யுமே.
1
கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்
ஒங்கு மாகட லோதநீ ராடிலென்
எங்கு மீசனெ னாதவர்க் கில்லையே.
2
பட்ட ராகிலென் சாத்திரங் கேட்கிலென்
இட்டு மட்டியு மீதொழில் பூணிலென்
எட்டு மொன்றும் இரண்டு மறியிலென்
இட்ட மீசனெ னாதவர்க் கில்லையே.
3
வேத மோதிலென் வேள்விகள் செய்கிலேன்
நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென்
ஓதி யங்கமோ ராறும் உணரிலென்
ஈச னையுள்கு வார்க்கன்றி கில்லையே.
4
காலை சென்று கலந்துநீர் மூழ்கிலென்
வேலை தோறும் விதிவழி நிறிகிலென்
ஆலை வேள்வி யடைந்தது வேட்கிலென்
ஏல ஈசனென் பார்க்கன்றி கில்லையே.
5
கான நாடு கலந்து திரியிலென்
ஈன மின்றி இருந்தவஞ் செய்யிலென்
ஊனை யுண்டல் ஒழிந்துவா னோக்கிலென்
ஞான னென்பவர்க் கன்றிநன் கில்லையே.
6
கூட வேடத்த ராகிக் குழுவிலென்
வாடி யூனை வருத்தித் திரியிலென்
ஆடல் வேடத்தன் அம்பலக் கூத்தனைப்
பாட லாளர்க்கல் லாற்பயன் கில்லையே.
7
நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென்
குன்ற மேறி யிருந்தவஞ் செய்யிலென்
சென்று நீரிற் குளித்துத் திரியிலென்
என்று மீசனென் பார்க்கின்றி இல்லையே.
8
கோடித் தீர்த்தங் கலந்து குளித்தவை
ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல்
ஓடும் நீரினை ஓட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்த்தகனோ டொக்குமே.
9
மற்று நற்றவஞ் செய்து வருந்திலென்
பொற்றை யுற்றெடுத் தானுடல் புக்கிறக்
குற்ற நற்குரை யார்கழற் சேவடி
பற்றி லாதவர்க் குப்பயன் இல்லையே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com